கடலூர் புதுப்பாளையம் அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பு துண்டிப்பு 6 ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தவில்லை
6 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாததால் கடலூர் புதுப்பாளையம் அங்கன்வாடி மையத்தின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.
கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 15 குழந்தைகள் தினமும் வந்து செல்கிறார்கள். சிமெண்டு சீட்டால் ஆன மேற்கூரையுடன் கூடிய இந்த மையத்தில் கோடைக்காலத்தில் வெப்பத்தை சமாளிக்க மின் விசிறி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த மையத்தின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டனர். விசாரித்தபோது கடந்த 6 ஆண்டுகளாக மின்கட்டண பாக்கியை செலுத்தாததால் மின் இணைப்பை மின்சாரத்துறை அதிகாரிகள் துண்டித்து இருப்பது தெரியவந்தது.
மேலும் அங்கன்வாடி மையத்துக்கான மின் கட்டணத்தை மைய பொறுப்பாளரே அவரது சொந்த பணத்தில் இருந்து கட்டி வந்ததும், குறிப்பிட்ட மாதத்துக்கு பிறகு மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அங்கன்வாடி மையத்தின் உள்ளே புழுக்கம் தாங்க முடியாமல் குழந்தைகளும், மைய பொறுப்பாளர்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலுக்கு அஞ்சி சில குழந்தைகளை அனுப்பி வைக்க பெற்றோர் மறுத்து வருகிறார்கள். எனவே குழந்தைகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்துக்கான மின் கட்டண பாக்கியை செலுத்தி மீண்டும் மின் இணைப்பு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story