கடலூர் முதுநகர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா? சப்-கலெக்டர் விசாரணை


கடலூர் முதுநகர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா? சப்-கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 8 April 2019 10:00 PM GMT (Updated: 8 April 2019 10:51 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெயிண்டர் சத்தியநாதன். இவருக்கும், திருவாரூரை சேர்ந்த ஏசுவின் மகள் பி.ஏ. பட்டதாரியான ஜெபஸ்டி(வயது 27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெபஸ்டி வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்து வந்த கடலூர் முதுநகர் போலீசார் ஜெபஸ்டியின் உடலை தூக்கில் இருந்து இறக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் குடிப்பழக்கம் உடைய சத்தியநாதன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் இதன் காரணமாக மனமுடைந்த ஜெபஸ்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெபஸ்டி வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஏசு கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருமணமாகி 4 ஆண்டுகளில் ஜெபஸ்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கடலூர் சப்-கலெக்டர் சரயூ விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story