கோடை வெயில் எதிரொலி : மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்தது


கோடை வெயில் எதிரொலி : மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்தது
x
தினத்தந்தி 9 April 2019 5:35 AM IST (Updated: 9 April 2019 5:35 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்தது.

மும்பை,

மும்பை நகருக்கு மோடக்சாகர், துல்சி, விகார், தான்சா, மேல் வைத்தர்ணா, கீழ் வைத்தர்ணா மற்றும் பட்சா ஆகிய 7 ஏரிகளில் இருந்து குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் வெட்டு இல்லாமல் ஒரு ஆண்டு முழுவதும் மும்பைக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஏரிகளில் 14 லட்சத்து 47 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும்.

கடந்த மழைக்கால முடிவில் மும்பை பெருநகரத்துக்கு ஒரு வருடத்துக்கு வினியோகிப்பதற்கு தேவையான தண்ணீர் இருப்பில் 8 சதவீதம் குறைவாக இருந்தது. அதன்படி 7 ஏரிகளிலும் சேர்த்து தண்ணீர் இருப்பு 13 லட்சத்து 13 ஆயிரத்து 960 மில்லியன் லிட்டராக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் அதிகரித்த வெயிலின் தாக்கம் காரணமாக ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்தது. தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நவம்பரில் மும்பை மாநகராட்சி 10 சதவீதம் குடிநீர் வெட்டை அமல்படுத்தியது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 7 ஏரிகளிலும் சேர்த்து 3 லட்சத்து 74 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் இருப்பு உள்ளது. அதாவது 7 ஏரிகளிலும் சேர்த்து தற்போதைய தண்ணீர் இருப்பு 26 சதவீதம் மட்டுமே.

2017-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் மில்லியன் லிட்டரும், கடந்த ஆண்டு 5 லட்சத்து 59 ஆயிரம் மில்லியன் லிட்டரும் தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீரை கொண்டு வரும் மழைக்காலம் வரை சமாளித்து விடலாம் என மாநகராட்சியின் நீரியல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு மராட்டியத்தில் வழக்கத்தை விட குறைந்த அளவே பருவமழை பெய்யும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story