மும்பை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
மும்பையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மும்பை,
மும்பையில் வட மத்திய மும்பை, தென் மத்திய மும்பை, தென் மும்பை, வட மும்பை, வடகிழக்கு மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வருகிற 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிய உள்ள நிலையில், நேற்று முக்கிய கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வடமத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியா தத் காலையில் சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, 11.30 மணியளவில் பாந்திராவில் உள்ள புறநகர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த போது அவருடன் நடிகரும், சகோதரருமான சஞ்சய் தத், கணவர் ஒவன் ரோன்கோன், நசீம் கான் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களும் இருந்தனர்.
அதே பாந்திரா கலெக்டர் அலுவலகத்தில் வட மும்பை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா மடோங்கர், வடமேற்கு மும்பை வேட்பாளர் சஞ்சய் நிருபம் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்து முடித்த பின்பு நடிகை ஊர்மிளா மடோங்கர், இந்து மதத்தை அவதூறாக பேசியதாக தன் மீது அளிக்கப்பட்டது அடிப்படை ஆதாரமற்ற போலி புகார் என்றார். மேலும் அவர் இந்து மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அதை மதிப்பதாகவும் கூறினார்.
தென் மும்பையில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்த், தென் மத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் ராகுல் செவாலே எம்.பி. ஆகியோர் மதியம் 1 மணியளவில் தென்மும்பையில் உள்ள நகர கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களுடன் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட பல தலைவர்கள் இருந்தனர்.
நகர கலெக்டர் அலுவலகத்தில் தென்மும்பை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோரா, தென்மத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஏக்நாத் கெய்க்வாட் ஆகியோரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
முக்கிய கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால் நேற்று பாந்திரா, தென்மும்பையில் உள்ள கலெக்டர் அலுவலக பகுதியில் அதிகளவில் கட்சியினர் திரண்டனர். கட்சியினரை கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story