நாம்தமிழர் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும் சீமான் பேச்சு


நாம்தமிழர் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 11:15 PM GMT (Updated: 9 April 2019 7:07 PM GMT)

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான இலவச கல்வி வழங்கப்படும் என்று, நாகையில் சீமான் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மாலதியை ஆதரித்து நேற்று அவுரித்திடலில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. 20 இடங்களிலும், அ.தி.மு.க. 20 இடங்களிலும் போட்டியிடுகிறது. 40 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இதை எந்த ஒரு ஊடகமும் காட்டுவது கிடையாது. நாம் தமிழர் கட்சியை பார்த்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பயப்படுகிறது. நீட் தேர்வை முதன்முதலின் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அப்போது அவர்களுடன் கூட்டணியில் இருந்து ஆதரித்து கடிதம் எழுதியது தி.மு.க. இன்று மக்களிடம் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து அதனை அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என்று கூறியது நாம் தமிழர் கட்சி. பூமி மனிதனுக்கே சொந்தமானது. இதனால் பூமிக்கு கேடு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் வரவிடமாட்டோம்.

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறும் கட்சிகள், அவர்களை கடனாளியாக்கியது எப்படி? கள், சாராயம் குடித்தவன் கூட போதை தொளிந்து எழுந்து விடுவான். ஆனால் ஜாதி மத போதையில் உள்ளவர்கள் தொளியமாட்டார்கள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிக்காத எந்த சமுதாயமும் முன்னேறவோ, மேம்படவோ முடியாது. மோடி சொன்ன தேர்தல் அறிக்கை ரஜினிகாந்துக்கு மட்டுமே புரிகிறது. ரஜினிகாந்த் நடிகர். மோடி இயக்குனர். இதனால் இயக்குனர் சொல்வதை நடிகர் செய்யவேண்டும்.

இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனியாக செயல்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழலை ஒழிப்போம். உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், பின்லாந்து ஆகிய நாடுகளில் வழங்கப்படும் கல்வியை விட தரமான, இலவசமான கல்வியை அளிப்போம். எனவே நாகை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மாலதிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார். பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் அப்பு உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story