அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்


அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 10 April 2019 4:00 AM IST (Updated: 10 April 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு,

அணைக்கட்டு ஒன்றியம் ஒதியத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது ரஜாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்தது. மேலும் 11 ஆழ்துளை கிணறுகளில் தற்போது 2 ஆழ்துளை கிணறு மட்டுமே இயங்கி வருகிறது. மீதியுள்ள 9 ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் இருந்தும் மோட்டார் இல்லாததால் பாழடைந்து வருகிறது. இதனால் கடந்த 2 மாதமாகவே 3 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ரஜாபுரம் பகுதியில் குடிநீர் வினியோகம் வழங்காததை குறித்து பொதுமக்கள், ஊராட்சி செயலாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரஜாபுரம் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் குடிநீர் வழங்கக்கோரியும், வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்தும் நேற்று காலை வேலூர் - ஒடுகத்தூர் செல்லும் சாலையில் தாங்கல் என்ற இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், குடிநீர் வழங்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் சிலரை கைது செய்ய முயன்ற போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார், அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story