திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்


திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 April 2019 10:30 PM GMT (Updated: 9 April 2019 8:13 PM GMT)

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் திடீரென இறந்தார். இதனையடுத்து மருத்துவமனையை கண்டித்து, பிறந்த குழந்தையுடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை செல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா (வயது 33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கவிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனையொட்டி அவர் புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் உடலில் ரத்தம் குறைவாக உள்ளதாக கூறினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கவிதாவிற்கு உடலில் ரத்தம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை காந்தி நகர் துறாபலித் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து உள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவிதாவின் கருவில் உள்ள குழந்தையின் நாடித் துடிப்பு குறைவதாக கூறியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து டாக்டர்கள் கவிதாவிற்கு சிகிச்சை அளித்து உள்ளனர். அப்போது அவரது உடல் நிலை திடீரென ஆபத்தான நிலைக்கு சென்றது. இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கவிதாவின் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் கவிதாவை ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனையில் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே கவிதா இறந்து விட்டார்.

அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. நேற்று காலை கவிதாவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து உள்ளனர். மேலும் கவிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு ஆபரேஷன் செய்த தனியார் மருத்துவமனையை கவிதாவின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கவிதாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஆனந்தன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கவிதாவின் உறவினர்கள் சிலரை, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story