குடும்ப தகராறில், மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை - தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


குடும்ப தகராறில், மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை - தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 April 2019 10:45 PM GMT (Updated: 9 April 2019 8:30 PM GMT)

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சிறுதங்கல்மேடு பகுதியை சேர்ந்த முதியவர் மாதேசன் (வயது 70). இவருடைய மனைவி மாதம்மாள்(55). இவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாதேசன் கடந்த 2017-ம் ஆண்டு மாதம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாதம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஏரியூர் போலீசார், மாதேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் அரசு வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மாதேசன் மீதான குற்றம் உறுதியானது.

இதையடுத்து மாதேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். மாதேசனுக்கு அசையும் அல்லது அசையா சொத்துக்கள் இருந்தால் அதை அரசு கையகப்படுத்தி அதில் கிடைக்கும் தொகையை மாதம்மாளின் மகளுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Next Story