100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டி


100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 10 April 2019 4:00 AM IST (Updated: 10 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, காஞ்சீபுரம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா தலைமையில் தேர்தல் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காஞ்சீபுரம் பழைய தாலுகா அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஜனநாயகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்களிப்பது தங்களின் கடமை என்பது தொடர்பான வாசகங்களை ஏந்தி பணியாளர்கள் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மாவட்ட திட்ட அதிகாரி சீனிவாசராவ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி சற்குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் ஊத்துக்கோட்டை குறுவட்ட வருவாய்த்துறையினரின் சார்பாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தண்டலம் ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் யுகேந்தர் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இந்த பேரணி தண்டலம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே இருந்து புறப்பட்டு பஜார் வீதி வழியாக பஸ் நிறுத்தத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து கிராம நிர்வாக அலுவலகம் அருகே முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், கண்ணப்பன், ரமணி, கிராம நிர்வாக அலுவலர் சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருவாய்த்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியை முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். படப்பை பெண்கள் மேல்நிலைபள்ளி எதிரே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் கீழ் படப்பை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் திரளான கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கெண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், படப்பை வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம் நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story