பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல் காரில் வந்தவர்கள் தப்பியோட்டம்; போலீசில் புகார்


பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல் காரில் வந்தவர்கள் தப்பியோட்டம்; போலீசில் புகார்
x
தினத்தந்தி 10 April 2019 3:45 AM IST (Updated: 10 April 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்தவர்கள் தப்பியோடியதாக தேர்தல் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

மலைக்கோட்டை,

தேர்தலையொட்டி திருச்சியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி முத்துகருப்பன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது விளையாட்டரங்கம் அருகே கோழிப்பண்ணை சாலையில் வந்த ஒரு காரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

காரில் இருந்து ரூ.60 ஆயிரத்து 800-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த 2 பேரில் ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவர், காஞ்சீபுரத்தை சேர்ந்த ராமு என்பது தெரியவந்தது. அந்த பணத்திற்கு அவர்களிடம் உரிய ஆவணம் இல்லை. திருச்சியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்ததாக அவர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதற்கான பத்திரிகை அழைப்பிதழையும் அதிகாரியிடம் காண்பித்துள்ளனர். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் காண்பிக்கவில்லை.

வழக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் அந்த பணத்தை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து சம்பந்தபட்டவரையும் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று கையெழுத்து பெறுவது உண்டு. இந்த நிலையில் அண்ணா விளையாட்டரங்கம் பகுதியில் காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தபட்டவர்களை திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அதிகாரிகள் முயன்றனர். அப்போது நாங்கள் தாசில்தார் அலுவலகத்தில் ஆவணத்தை கொடுத்து அந்த பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறி அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து உயர்அதிகாரிகளுக்கு பறக்கும்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரில் வந்தவர்கள் தப்பியோடியதாக கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக காரில் தப்பிச்சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களாக இருக்கலாமா? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் அந்த காரில் எடுத்து வரப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story