கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்கப்பட்ட விவகாரம்: கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாமல் மனசாட்சியுடன் நடந்து கொண்டோம் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி


கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்கப்பட்ட விவகாரம்: கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாமல் மனசாட்சியுடன் நடந்து கொண்டோம் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி
x
தினத்தந்தி 9 April 2019 11:15 PM GMT (Updated: 9 April 2019 9:45 PM GMT)

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்கப்பட்ட விவகாரத்தில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாமல் மனசாட்சியுடன் நடந்து கொண்டோம் என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு திருப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறியுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மு.தியாகராஜன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அவினாசி, திருப்பூரில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அவினாசி புதிய பஸ் நிலையம், திருப்பூர் பாண்டியன் நகரில் பிரசாரத்தின் போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி வர, திறமையான பிரதமர் வர நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தியாகராஜன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். இப்பகுதி மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை ஜெயலலிதா வழி வந்த என்னுடைய அரசு நிறைவேற்றித்தந்து இருக்கிறது. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயத்துக்கு தண்ணீர் அவசியம் என்பதை அறிவேன். மனிதனுக்கு உயிரைப்போல் விவசாயிக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீர் பெறுவதற்காக 60 ஆண்டு காலம் நீங்கள் போராடிக்கொண்டிருந்தீர்கள். அதற்கு தீர்வு கண்ட அரசு என்னுடைய தலைமையிலான அரசு. அந்த திட்டத்தை நானே நேரடியாக கவனத்தை செலுத்தி அந்த திட்டம் மிகச்சிறப்பாக, நவீன முறையில் இருக்க வேண்டும். எந்த காலக்கட்டத்திலும் இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் நேரடிப்பார்வையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டம் கால்வாய் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து குளம், குட்டைகளுக்கு நிரம்பும் வகையில் முதல்கட்டமாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் கால்வாய் மூலமாக கொண்டு வரும்போது நீர் வீணாகும். ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகக்கூடாது என்பதற்காக குழாய் மூலமாக ஏரி, குளங்களுக்கு நீர் நிரம்பும் வகையில் அந்த திட்டத்தை மாற்றியமைத்துக்கொடுத்தேன். அதற்கு 240 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். எத்தனை கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. விவசாயிகளுக்கான திட்டம் என்பதால் குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்னும் 20, 30 ஆண்டுகள் கழித்து காலநிலை மாறும்போது குழாய்களில் நீர் கொண்டு செல்வதில் சிரமத்தை தவிர்க்கும் வகையில் மின்மோட்டார்கள் அமைக்கப்படுகிறது. அதற்கான மின்கட்டணத்தை விவசாயிகள் செலவழிக்கக்கூடாது என்பதற்காக சூரியஒளி மின்சாரம் மூலமாக மின்மோட்டார்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இருக்கக்கூடாது என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு, பகல் பாராமல், மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் விவசாயிகள், வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு எனது அரசில் எந்தவித சிரமமும் வரக்கூடாது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் அழைத்து பேசும்போது, எப்படி செய்தால் சரியாக இருக்கும் என்று ஓய்வு பெற்ற பொறியாளர்களை வைத்து, கருத்துக்களை பெற்று அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்றிக்கொடுத்து இருக்கிறோம்.

இந்த திட்டத்துக்கு கடன் பெற்றால் காலதாமதம் ஏற்பட்டு அதனால் திட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் நின்று கருதி, முழுக்க முழுக்க மாநில நிதியில் செயல்படுத்தப்படுகிறது. ரூ.1,652 கோடியில் இந்த திட்டத்துக்கு நானே இங்கு வந்து விவசாயிகளின் ஆதரவோடு அடிக்கல் நாட்டினேன். உங்களுடைய கனவு திட்டத்தை ஜெயலலிதா அரசு நிறைவேற்றிக்கொடுத்து இருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றி நானே வந்து திறந்து வைப்பேன். இந்த திட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கோதாவரி–காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தையும் நிறைவேற்ற இருக்கிறோம். அதனால் இன்னும் கூடுதலாக நீர் கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவையான நீர் முழுமையாக கொடுக்கப்பட்டு இந்த பகுதி செழித்து வளமுள்ள பகுதியாக இந்த அரசு உருவாக்கிக்காட்டும்.

விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்க்கெட் அமைத்து அங்கு விவசாயிகள் விற்பனை செய்யலாம். விலை கட்டுப்படியாகாவிட்டால் அங்கேயே குளிர்சாதன கிடங்கு அமைத்து அங்கு சேமித்து வைக்கலாம். விலையேறும்போது விற்பனை செய்து லாபம் பெறலாம். ஆன்லைனில் காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறோம். சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் தனியார் பங்களிப்புடன் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க இருக்கிறோம். அவ்வாறு அமைந்தால் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஆன்லைனில் விற்பனை செய்து விவசாயிகள் இருக்கும் ஊர்களிலேயே வங்கி மூலமாக பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

வேளாண் பெருமக்கள் கால்நடை வளர்ப்பில் உள்ளனர். நோய் தாக்காத வகையில் பசு இனங்களை உருவாக்க மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் அருகில் 900 ஏக்கர் பரப்பளவில் ரூ.900 கோடியில் அமைக்க இருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறினார். வழங்கினாரா? இந்த பகுதியில் யாராவது பெற்று இருக்கிறீர்களா?. அது பொய் அறிக்கை. பச்சைப்பொய் பேசி, வாக்குகளை பெறுவதற்காக நாடகமாடி வருகிறார். நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல். ஆனால் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் நடப்பது போல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆளும் கட்சி அ.தி.மு.க., நான் முதல்–அமைச்சர். அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாங்கள் சொல்வது நிறைவேற்றப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையை நம்ப வேண்டாம். இந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து, மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டு ஓட்டுக்களை பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தி.மு.க. தேர்தல் அறிக்கை. மக்கள் உஷாராக இருக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்த கட்சி தி.மு.க. கட்சி. 2ஜி வழக்கில் லட்சக்கணக்கான கோடி ஊழல் செய்தனர்.

முரசொலிமாறன் ஒரு வருடம் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அப்போது கூட பா.ஜனதா ஆட்சியில் மந்திரி சபையில் அவர் அங்கம் வகித்தார். இப்போது மதவாத கட்சியோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது என்கிறார்கள். அப்போது மட்டும் உங்களுக்கு பா.ஜனதா மதவாத கட்சியாக தெரியவில்லையா?. தி.மு.க.–பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று இலாகா இல்லாத அமைச்சராக 1 வருடம் முரசொலிமாறன் இருந்தார். அப்போது உங்களுக்கு தெரியவில்லை. இப்போது நாங்கள் போய் கூட்டணி சேர்ந்ததும் மதவாத கட்சி என்று முத்திரை குத்துகிறார்கள். மக்களை ஏமாற்றுவது தி.மு.க.

கருணாநிதி மறைந்து விட்டார். மெரினா கடற்கரையோரம் கருணாநிதியை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். நான் தெளிவாக அவர்களிடம் சொன்னேன். உங்களுக்கு இடம் தருகிறேன். நீங்கள் கேட்கும் இடம் குறித்து இப்போது கோர்ட்டில் வழக்கு இருப்பதால் வழங்க முடியாது. முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரை அடக்கம் செய்த இடம் அருகே ஜெயலலிதாவை அடக்கம் செய்து இருக்கிறோம். ஜெயலலிதாவை அங்கு அடக்கம் செய்ததை எதிர்த்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யக்கூடாது என்று கோர்ட்டில் தெரிவித்தனர். கோர்ட்டில் வழக்கு இருப்பதால் நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது என்றும், அரசு வக்கீலை கேட்டு சாத்தியம் இருந்தால் செய்வோம் என்று கூறினோம். அரசு வக்கீலிடம் கேட்டோம். அவர், கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருப்பதால் சாத்தியமல்ல. அனுமதி கொடுக்க முடியாது என்றார்.

மு.க.ஸ்டாலின் மிகவும் உருகி நாகர்கோவிலில் பேசி இருக்கிறார். 6 அடி இடம் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இது பச்சைப்பொய். கருணாநிதியை அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரில், காந்தி மண்டபத்துக்கு அருகில், ரூ.300 கோடி மதிப்பில் நிலத்தை, மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய அரசாணை போட்டு உத்தரவு போட்டு நான் கொடுத்தேன். ஆனால் மு.க.ஸ்டாலின் நாங்கள் 6 அடி நிலம் கொடுக்காதது போல் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடம் குறித்து தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் சிலர் வழக்கு தொடுத்தனர். வழக்கு நடக்கும்போது அந்த இடத்தில் எப்படி அனுமதி கொடுக்க முடியும். இதை விளக்கமாக கூறி மாற்று இடத்தையும் கொடுத்தோம். அதன்பிறகு ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் ஒரேநாள் இரவில் வாபஸ் வாங்கி விட்டார்கள். எவ்வளவு வஞ்சக உள்ளம் படைத்தவர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆரின் வாரிசாக இருந்த ஜெயலலிதாவை நல்லடம் செய்தோம். அங்கு இடம் கொடுத்தது தவறு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் வாபஸ் பெற்றனர். நீங்கள் மனசாட்சி உள்ள மனிதர்களா?. ஒருவர் இறந்து விட்டால் அவரைப்பற்றி யாரும் குறைசொல்லக்கூடாது என்று நாம் உள்ளோம். அதுதான் தமிழர்களின் பண்பாடு. ஆனால் ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்தது தவறு என்று வழக்கு தொடுத்தவர்கள் இரவோடு, இரவாக ஏன் வாபஸ் வாங்கினார்கள்.

மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் தானே போனார்கள். தனது அப்பாவுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. நான் உடனே மேல்முறையீடு செய்தேனா?. செய்யவில்லையே. மனசாட்சி உள்ள மனிதர்கள் நாங்கள். அ.தி.மு.க.வினர் மனசாட்சி உள்ளவர்கள். உண்மை இப்போது வெளியே வந்திருக்கிறது. யார் தவறு செய்தார் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். நான் மனப்பூர்வமாக இடம் கொடுத்தேன். நான் விவசாயி. மனசாட்சி உள்ள மனிதன் நான். அவர்களை போல் அல்ல.

பச்சைப்பொய்யை எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஒரு கட்சிக்கு தலைவராக இருப்பதற்கு லாயக்கா?. வேண்டும் என்றே பரப்பி அனுதாபத்துக்காக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 6 அடி நிலத்தை தனது அப்பாவுக்காக கேட்டதாகவும், நான் கொடுக்க மறுத்ததாகவும் ஒரு தவறான செய்தியை அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இப்பக்கூட நான் கையெழுத்து போட்டது தான் செல்லும். வேண்டும் என்ற திட்டமிட்டு வி‌ஷமத்தனமான பிரசாரத்தை பரப்புகிறார்கள்.

மனசாட்சி இல்லாமல் பேசி வருகிறார்கள். மனசாட்சி உள்ள மனிதனாக பேச வேண்டும். தி.மு.க. எங்களை பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை. உங்களுக்கு ஒருநியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? இது ஜனநாயக நாடு. எங்களைப்பொறுத்தவரை அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பது தான். சட்டம் அவ்வாறு கூறியது. சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டோம். 6 அடி அல்ல 2 ஏக்கர் நிலம் ஜெயலலிதா அரசு கருணாநிதிக்கு கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கூற வேண்டும். உண்மையாக கட்சி நடத்தியிருந்தால், உண்மையான மனிதர், மனசாட்சி உள்ள மனிதர் என்றால் மக்களிடம் சொல்ல வேண்டும். நாங்கள் 2 ஏக்கர் நிலம் வழங்கி அரசாணை வழங்கியவுடன் அனைத்து தொலைக்காட்சிகளிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

திருப்பூரில் 2–வது, 3–வது குடிநீர் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது அ.தி.மு.க. அரசு. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்பட்டது. பனியன் தொழிலை பாதுகாக்க சாய, சலவைப்பட்டறைகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா கடன் கொடுக்கப்பட்டது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழகத்தில் இப்போது தேவைப்படும் மின்சாரம் 16 ஆயிரம் மெகாவாட். தி.மு.க. ஆட்சியின்போது 9 ஆயிரம் மெவாட் மின்சார தேவை இருந்தபோது மின்வெட்டு இருந்தது. இப்போது மின்தேவை அதிகம் இருந்தும் தடையில்லா மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு வழங்கி வருகிறது. மின்உற்பத்தியை பெருக்கியதால் தமிழக அரசுக்கு விருது கொடுத்துள்ளார்கள்.

வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறோம். நெசவாளர்கள், விசைத்தறிக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறோம். ரூ.1,400 கோடியில் திருப்பூர் மாநருக்கு 4–வது குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெருப்பெரிச்சல் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பில் 1,800 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக ரூ.150 கோடியில் நொய்யல் நதிக்கரையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்படுகிறது. புனரமைப்பு திட்டத்தில் ரூ.2,000 கோடியில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. புஷ்பா தியேட்டர் முதல் பாண்டியன் நகர் வரை மேம்பாலம் அமைக்க ரூ.900 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய பின்னலாடை வளர்ச்சி வாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story