வாக்குப்பதிவு மையங்களுக்கான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தகவல்
வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி வீர ராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அளவிலான அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, தனித்துணை ஆட்சியர் கார்த்திகை செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் பேசியதாவது:–
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, திருச்சுழி மற்றும் அறந்தாங்கி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 169 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கைகளில் மண்டல அலுவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.
மேலும் ஒவ்வொரு மண்டல அலுவலரும் தங்களது கட்டுப்பட்டின் கீழ் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்கள் ஆகியவற்றை கையாளும் முறை குறித்து பயிற்சிகள் வழங்கி தெளிவுபடுத்திட வேண்டும். வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் தயார் நிலையில் உள்ளது.
அவற்றை அந்தந்த மண்டல அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு அவரவர் வீடுகளில் நேரிடையாக வழங்க வேண்டும். அவ்வாறு பூத் சிலிப் வழங்கும்போது வாக்குப்பதிவின் போது வாக்காளர் சீட்டுடன் இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம் என்பதை தெளிவாக எடுத்துரைத்திட வேண்டும்.
இதுதவிர, வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த வேண்டிய கட்டு உரைகள், அழியா மை உள்ளிட்ட அத்தியாவசிய தளவாடப்பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அந்தப் பொருட்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று சேர்வதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். வாக்குப்பதிவு நேரம் துவங்குவதற்கு முன்பாக வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கான மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
அதில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நீக்கி சான்றொப்பமிட்டு உறுதி செய்த பின்னரே தேர்தல் வாக்குப்பதிவினை தொடங்க வேண்டும். வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்திட வேண்டும். வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் அனைத்து மண்டல அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். எனவே மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து விழிப்புடன் பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.