இந்தியா இந்திராகாந்தி காலத்திலேயே வல்லரசாகி விட்டது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


இந்தியா இந்திராகாந்தி காலத்திலேயே வல்லரசாகி விட்டது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 10 April 2019 4:45 AM IST (Updated: 10 April 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா இந்திராகாந்தி காலத்திலேயே வல்லரசாகி விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

காரைக்குடி,

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்பு அவர் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தமிழகம் மட்டுமல்லாமல் நாடே உற்று நோக்குகிறது. ப.சிதம்பரத்தால் நாட்டில் பல லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பயில கல்விக் கடன் கிடைக்க பெற்றுள்ளனர்.

வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிற 25 கோடி மக்களுக்கும் வருடந்தோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்க காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த போது வறுமைக் கோட்டிற்குக் கீழே 90 சதவீத மக்கள் வாழ்ந்தனர். காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சியில் இந்தநிலை மாறி தற்போது 20 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், அந்த 20 சதவீத மக்களும் வறுமைக் கோட்டை தாண்டி வந்து விடுவார்கள்.

பணமதிப்பிழப்பால் நாடு பின்னோக்கி சென்றுவிட்டது. ஆட்சி மாற்றம் தேவை என இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து வருவதுடன், அதனுடன் சேர்ந்து வருமானவரித்துறையும் மத்திய அரசின் ஏவல் போல செயல்படுகின்றன. இந்தியா இந்திராகாந்தி காலத்திலேயே வல்லரசாகி விட்டது.

மதச்சார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக உள்ளது அதனால் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் இதில் மாற்றுக் கருத்து கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி வருகிற 12–ந் தேதி தமிழகத்தில் 4 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். முதல் கூட்டம் கிருஷ்ணகிரியிலும், 2–வதாக சேலத்திலும் நடக்கிறது. சேலம் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

3–வதாக தேனியிலும், 4–வதாக விருதுநகர் தொகுதி திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பேசியதாவது:– மாநிலங்கள் விரும்பினால் தான் இனி நீட் தேர்வு என ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லிவிட்டு, தேர்வை ரத்து செய்ய விரும்பாத பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி நீண்டகாலமாக அரசியல் பேசாதவர்.

ஜெயலலிதா இருக்கும் வரை அமைதியாக இருந்தவர். திடீரென அரசியல் பேசுவதால் அவர் உளறுகிறார். நமது நாடு பத்திரமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. 3 முறை பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா தான் வென்றது. அப்போது காங்கிரஸ் தான் ஆட்சி செய்தது. வீரமும், தீரமும் நிறைந்த காங்கிரஸ் கட்சி இருக்கும்போது, மோடியின் கையில் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்வது தவறு.

ஜி.எஸ்.டி.யால் மக்கள் சீரழிந்துள்ளனர். நாங்கள் அதிகபட்சம் 18 சதவீத வரி நிர்ணயிப்போம். ஆனால் பா.ஜ.க. 28 சதவீதம் நிர்ணயித்துள்ளது. டீசல், பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவோம். இதன்மூலம் அவற்றை பாதி விலைக்கு கொடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் அப்பச்சி சபாபதி, காரைக்குடி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கரு.மாணிக்கம், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீரா உசேன், துணைத் தலைவர் வக்கீல் சஞ்சய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story