குடிநீர் வினியோகம் தொடர்பான புகாருக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை - கலெக்டர் உத்தரவு


குடிநீர் வினியோகம் தொடர்பான புகாருக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 April 2019 4:04 AM IST (Updated: 10 April 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் தொடர்பான புகாருக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்,

கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பொதுக்குழாயிலிருந்து மின்மோட்டார் வைத்து நீரை உறிஞ்சக்கூடாது. பொதுக் குழாயிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக குடிநீர் எடுக்கக்கூடாது. குடிநீரில் வாகனங்களை கழுவக் கூடாது. மேலும், பொதுக் குழாயிலிருந்து வரும் குடிநீரை குழிதோண்டி எடுக்கக் கூடாது.

ஊரகப்பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் குக்கிராமங்களில் முறையாக இத்திட்டம் செயல்படுகிறதா என்பதை தினசரி ஆய்வு செய்யவேண்டும். குடிநீர் வழங்கும் பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும். கிராமங்களில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் முழுக் கொள்ளளவில் நீர் ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு கிராமங்களில் முறைகேடாக உள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுதலை தடுத்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து குடிநீர் வினியோகம் தொடர்பாக வரும் புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக, புகார் வரப்பெறும் இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு புகாரினை நிவர்த்தி செய்திட வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் உள்ளடக்கிய விரைவு நடவடிக்கை குழு ஒன்றினை அமைக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள கிராமத்திற்கு தேவையான குடிநீர், டேங்கர் லாரி மூலம் வழங்கிட உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும். மோட்டார் பழுது, குழாய் உடைப்பு போன்றவற்றை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்து, குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களது புகார்களை மாவட்ட அளவில் 04562252909 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். வட்டார அளவில் பொதுமக்கள் தங்களது புகார்களை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர் சிவஞானம் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர் சுரேஷ் உள்பட அனைத்து நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story