சாப்டூர் வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி: விலங்குகளின் தாகம் தீர்க்க நடவடிக்கை


சாப்டூர் வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி: விலங்குகளின் தாகம் தீர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 10 April 2019 4:14 AM IST (Updated: 10 April 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

விலங்குகளின் தாகம் தீர்க்க சாப்டூர் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

பேரையூர்,

பேரையூரை அடுத்துள்ளது, சாப்டூர் வனப்பகுதி. 25 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளும், பறவைகள், பூச்சி இனங்கள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதி அமைந்துள்ள மலைகளில் கடந்த 6 மாதமாக மழை இல்லாத காரணத்தினால் அங்குள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. இதனால் மான், காட்டெருமை மற்றும் சிறிய வகை விலங்குகள், தங்களது குடிநீர் தேவைக்கு குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது.

அவ்வாறு வரும்போது அவை வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

எனவே விலங்குகள் தேவைக்காக காட்டுப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே விலங்குகளின் குடிநீர் தேவையை போக்க சாப்டூர் வனத்துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலை அடிவாரத்தில் உள்ள கேணி, மணலூத்து, மல்லப்புரம், மயிலாடும்பாறை, வனத்துறை சாலையின் அருகே முடங்கிகாடு, அழகாபுரி, சந்தையூர் மலை பகுதி மற்றும் தலமலையான் ஆகிய இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து உள்ளனர். தற்போது விலங்குகளுக்காக அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி பொன்னுசாமி கூறும்போது, “கோடைகாலம் என்பதால் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்கு சாப்டூர் வனப்பகுதியில் விலங்குகள் இறங்கும் இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வனத்துறை ஆழ்துளை கிணறுகளில் இருந்தும், அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு விலங்குகளின் இறப்பு இல்லை. தற்போதும் கோடை வெயில் அடிப்பதால் குடிநீர் தேவைக்கு விலங்குகள் வருகை தரும் என்பதால் அவற்றின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இப்பணிகளில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

Next Story