விடுதி கட்டணத்தை ரத்து செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
விடுதி கட்டணத்தை ரத்து செய்யக்கோரி அண்ணாமலை பல் கலைக்கழக மாணவர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாமரை, ரோஸ், மல்லிகை, முல்லை ஆகிய விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்கள், இந்த மாதம் விடுதி கட்டணமாக ரூ.5 ஆயிரத்தை உடனே கட்ட வேண்டும் என்றும், கட்ட தவறினால் தேர்வு எழுத நுழைவு சீட்டு வழங்க மாட்டோம் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் விடுதி மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பல்கலைக்கழக பூமாகோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடுதி வசூல் வேட்டையை உடனே நிறுத்த வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. உதவித்தொகையை உயர்த்தி, விடுதி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், விடுதியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பின்னர் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை விடுதி மாணவ-மாணவிகள் மீண்டும் பூமாகோவில் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விடுதி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி அறிந்த பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story