குடிநீர்-சாலை பிரச்சினையை தீர்க்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கருப்பு கொடி ஏந்தி மக்கள் போராட்டம்


குடிநீர்-சாலை பிரச்சினையை தீர்க்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கருப்பு கொடி ஏந்தி மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 April 2019 4:33 AM IST (Updated: 10 April 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் குடிநீர் மற்றும் சாலை பிரச்சினையை தீர்க்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ரூ.70½ கோடி மதிப்பில் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டன. எனினும், திருமலைசாமிபுரம், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் முறையாக குடிநீர் வரவில்லை. இதையடுத்து புதிதாக பதிக்கப்பட்ட பகிர்மான குழாய் மாற்றப்பட்டது. ஆனால், குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீர் வினியோகம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே மென்டோன்சா காலனி, திருமலைசாமிபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், குடிநீர் வினியோக பிரச்சினை தீராததால், குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்கள் இன்னும் மூடப்படவில்லை. இதனால் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் சாலை பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டி காளியம்மன்கோவில் அருகே திரண்டனர். பின்னர் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், சாலை அமைக்க வேண்டும் என்று கோரி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் மற்றும் சாலை பிரச்சினையை தீர்க்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் கூறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story