பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் மீது பெண் பாலியல் புகார் ‘ஆபாச வீடியோ’ வெளியானதால் பரபரப்பு


பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் மீது பெண் பாலியல் புகார் ‘ஆபாச வீடியோ’ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 April 2019 5:00 AM IST (Updated: 10 April 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இதுகுறித்த ‘ஆபாச வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில், கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கதிர்காமு (வயது 61). முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர்.

தற்போது இவர், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், டாக்டர் கதிர்காமு மீது தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 35. அவர், தன்னை கதிர்காமு ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார். அதன்பேரில், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடந்ததாக கூறியுள்ளார். இவ்வளவு தாமதமாக புகார் அளிப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலியாக தனக்கு உயிர் பாதுகாப்பு, மானப்பாதுகாப்பு கேட்டு புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

இதற்கிடையே கதிர்காமு குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ நேற்று சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. தணிக்கை செய்யப்பட்ட (சென்சார்) வீடியோ என்ற பெயரில், ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், டாக்டர் கதிர்காமு போன்ற தோற்றத்தில் ஒருவர், ஒரு பெண்ணுடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி உள்ளது. வேட்பாளர் மீது பெண் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story