குன்னூரில், விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகள் - வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை


குன்னூரில், விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகள் - வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 10 April 2019 4:00 AM IST (Updated: 10 April 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குன்னூர்,

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியின் கோரத்தாண்டவம் வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகின்றன.

குறிப்பாக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

குன்னூர் அருகே பாலாடா கோலானிமட்டம் குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர். இதில் கேரட் பயிர் தற்போது நன்கு வளர்ந்து உள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் கூட்டம் கோலானிமட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தன. பின்னர் அங்கு பயிரிடப்பட்டு இருந்த கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே காட்டெருமை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story