மோடிக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்த 3 பேர் கைது - புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள்
கோவையில் பிரதமர் மோடிக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்த புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் சிலர் அனுமதி இல்லாமல் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்வதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்து கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த கதிரொலி (வயது 25), அஸ்வின் (24), நந்தன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் வினியோகம் செய்த நோட்டீசை போலீசார் வாங்கி பார்த்தனர். அந்த நோட்டீசில், பிரதமர் மோடிக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்ற தலைப்பில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. ஆனால் துண்டுபிரசுரத்தை வினியோகம் செய்ய அவர்கள் 3 பேரும் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை.
இதையடுத்து சட்டவிரோதமாக கூடுதல், அனுமதி இல்லாமல் நோட்டீஸ் வினியோகம் செய்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story