சேலம் அருகே லாரி மோதி விபத்து, 2 டிரைவர்கள் உடல் நசுங்கி பலி
சேலம் அருகே லாரி மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
சேலம்,
சென்னை பல்லாவரம் புதுத்தெருவை சேர்ந்தவர் கருத்தபாண்டி (வயது 35). இவர் கன்டெய்னர் லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியில் அலுமினியம் பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்த போது லாரியின் பிரேக் பழுதானது. இதனால் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (35) என்பவர் கோவையில் இருந்து கன்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு அம்மாபேட்டை அருகே வந்தார். அங்கு வேறு ஒரு கன்டெய்னர் லாரி நிற்பதை பார்த்ததும், அங்கு சாலையோரத்தில் இவர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தினார். அப்போது பழுதாகி நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் டிரைவர் தனது நண்பர் என்று தெரிந்தது.
இதையொட்டி கருத்தபாண்டி, பாஸ்கரன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கன்டெய்னர் லாரியின் சக்கரம் முன்புறம் படுத்தவாறு பழுதான பிரேக்கை சரி செய்து கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் தொப்பூரை சேர்ந்த டிரைவர் லோகநாதன் (52) என்பவர் திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களை ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி வந்தார்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பழுதாகி நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது தர்பூசணி பழங்கள் ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதனால் கன்டெய்னர் லாரி சற்று நகர்ந்தது. அப்போது 2 பேர் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி கன்டெய்னர் லாரி டிரைவர்கள் கருத்தபாண்டி, பாஸ்கரன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story