தமிழகத்துக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க பாடுபடுவேன் - கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பேச்சு


தமிழகத்துக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க பாடுபடுவேன் - கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 10:00 PM GMT (Updated: 9 April 2019 11:04 PM GMT)

தமிழகத்துக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க பாடுபடுவேன் என்று கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.

பெத்தநாயக்கன்பாளையம்,

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்மம்பாளையம், கள்ளாநத்தம், துலுக்கனூர், தென்னங்குபாளையம், ராமநாயக்கன்பாளையம், வளையமாதேவி, மஞ்சினி, புங்கவாடி, கூலமேடு, பைத்தூர், தாண்டவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பேசும் போது கூறியதாவது:-

மத்தியில் பிரதமர் மோடி நல்லாட்சி செய்து வருகிறார். தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி ஆக இருந்து இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக உயர்ந்துள்ளார். விவசாயிகள், பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும் சிறப்பாக செயலாற்றி வருகிறார். தேர்தலுக்கு பின்னர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க உள்ளார்.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தார் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வசிஷ்ட நதியின் குறுக்கே பல்வேறு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின், சொந்த மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நலத்திட்டங்கள் வந்து சேரும். மேலும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமையும் பட்சத்தில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கவும், உங்களுக்காக அயராது பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். எனவே எனக்கு முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின் போது, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், காமராஜ் எம்.பி., சின்னதம்பி எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார், தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், பா.ம.க. மாவட்ட செயலாளர் நடராஜ், தே.மு.தி.க. மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபா, த.மா.கா. மாவட்ட தலைவர் காளிமுத்து, தே.மு.தி.க. ஆத்தூர் ஒன்றிய செயலாளர்கள் குமாரசாமி பச்சமுத்து, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன், அ.தி.மு.க. மாவட்ட ஒன்றிய துணை செயலாளர் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

வேட்பாளர் எல்.கே.சுதீஷ் செல்லும் வழி எங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் அமோக வரவேற்பு அளித்தனர்.

Next Story