திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்களை கொள்ளையடித்த ஆசாமி கைது


திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்களை கொள்ளையடித்த ஆசாமி கைது
x
தினத்தந்தி 9 April 2019 11:18 PM GMT (Updated: 9 April 2019 11:18 PM GMT)

திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்களை கொள்ளையடித்த ஆசாமி மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மும்பை,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் பழமையான கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன் கோவிலில் இருந்த 3 தங்க கிரீடங்கள் மாயமாகின. இந்த கிரீடங்கள் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமி சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தவை ஆகும்.

மொத்தம் 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்த கிரீடங்களின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து திருப்பதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கிரீடங்களை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

போலீசா£ கை ரேகை, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடிவந்தனர். மேலும் கொள்ளையனின் கைரேகையை மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநில போலீசாருக்கும் அனுப்பி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை தாதர் ரெயில்வே போலீசாரிடம் ஆகாஷ் பிரதாப் சரோடே என்பவர் திருட்டு வழக்கில் சிக்கினார். அப்போது நடந்த விசாரணையில், அவர் தான் திருப்பதி கோவிலில் கிரீடங்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் கைரேகை மூலம் போலீசார் இதை உறுதி செய்தனர்.

கொள்ளையன் ஆகாஷ் பிரதாப் சரோடே, மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் ஜூவால் கன்டேர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் கோவிலில் கொள்ளையடித்த தங்க கிரீடங்களை மும்பையை சேர்ந்த நகை வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரியையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story