7 பேரால் எப்படி கவிழ்க்க முடியும்? எம்.எல்.ஏ.க்கள் ஓடி விடாமல் தடுக்க ஆட்சி மாற்றம் என்கிறார்; ரங்கசாமிக்கு நாராயணசாமி பதிலடி


7 பேரால் எப்படி கவிழ்க்க முடியும்? எம்.எல்.ஏ.க்கள் ஓடி விடாமல் தடுக்க ஆட்சி மாற்றம் என்கிறார்; ரங்கசாமிக்கு நாராயணசாமி பதிலடி
x
தினத்தந்தி 10 April 2019 12:00 AM GMT (Updated: 9 April 2019 11:24 PM GMT)

7 பேரை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும். எம்.எல்.ஏ.க்கள் ஓடிவிடாமல் தடுக்கவே ரங்கசாமி ஆட்சி மாற்றம் என்கிறார் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக நெல்லித்தோப்பு தொகுதி அண்ணாநகர், திருமால் நகரில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார். அவருடன் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி, முன்னாள் கவுன்சிலர் வேலவன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

வாக்கு சேகரிப்பின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டு மக்கள் மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. புதுவை மாநிலத்துக்கு எந்த திட்டமும் தரப்படவில்லை.

எந்த திட்டமாக இருந்தாலும் அதை போராடி தான் பெற வேண்டியிருந்தது. கவர்னர் கிரண்பெடியும் திட்டங் களை தடுக்கிறார். இலவச அரிசி போடக்கூட போராடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். இப்போது அரிசி வந்துவிட்டது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி நிறுத்திவிட்டனர். எதிர்ப்புகளுக்கு இடையில் சுற்றுலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை புதுச்சேரிக்கு கொண்டுவந்துள்ளோம்.

மாற்று கட்சியினர் தற்போது நடக்க உள்ளது நாடாளுமன்ற தேர்தல் என்று தெரியாமல் சட்டமன்ற தேர்தல் போல் பேசி வருகின்றனர். எம்.பி. என்பவர் மத்திய அரசுக்கு பாலமாக இருந்து மாநில அரசுக்கு உதவுபவர்தான். எதிர்க்கட்சியில் ஒருவர் தினமும் வசைபாடுகிறார். அவர்கள் யார் பிரதமராக வேண்டும் என்று சொல்லி ஓட்டுகேட்கிறார்கள்?

முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சி மாற்றம் என்கிறார். நாங்கள் 18 பேர் உள்ளோம். அவர்கள் 7 பேர்தான் உள்ளனர். எப்படி ஆட்சி மாற்றம் நிகழும்? தொடர்ந்து குதிரை பேரம் நடத்தியும் அவர்களால் எதுவும் முடியவில்லை. அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க் கள் ஓடிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றம் என்று கூறி வருகிறார்.

விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர்கள் என அனைவரும் வைத்திலிங்கத்துக்கு வாக்களிப்பார்கள். 4 பிராந்தியங்களிலும் தற்போது எழுச்சி ஏற்பட்டுள்ளது. எனவே மிகப்பெரிய வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றிபெற்று மத்திய மந்திரியாவார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை உப்புசப்பு இல்லாதது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். விவசாயிகளின் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மானியம், நீட் தேர்வு ரத்து என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கடந்த தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் 5 கோடி பேர் வேலையினை இழந்துள்ளனர்.

தற்போது ஏழை குடும்பங் களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் அத்தகைய நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு தற்போது முதியோர் உதவித்தொகை என பல்வேறு உதவித்தொகைகள் மூலம் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை சேர்க்கும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கிடைக்கும். இதனால் ஏழைகள் லட்சாதிபதி ஆவார்கள். எனவே பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி என்பது காலி பெருங்காய டப்பா.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவரிடம் நீங்கள் கோட்டக்குப்பத்தை தாண்ட முடியாது என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு, ‘கோட்டக்குப்பத்தை அவர் பட்டா போட்டு வைத்துள்ளாரா?. நான் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. இதுபோன்ற மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சும் ஆட்கள் நாங்கள் அல்ல’ என்றார்.

Next Story