சுதந்திரத்துக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தான் பிரிந்திருக்காது - மோடி பேச்சு
சுதந்திரத்துக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தான் பிரிந்திருக்காது என்று மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறினார்.
அவுசா,
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டம் அவுசா நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள், உங்கள் ஓட்டு வான் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இருக்க வேண்டும். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்திருக்காது. அப்போது போலவே இன்றைய காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் பாகிஸ்தானுக்கு ஆதரவானதாகவே இருக்கிறது.
காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியும் காஷ்மீருக்கு தனி பிரதமர் என்ற கருத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. மராட்டியத்தின் வலிமையான மனிதராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எப்படி இதுபோன்ற கருத்துகளை கொண்ட கட்சிகளுடன் இணைந்தார்.
புலவாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாலாகோட் வான் தாக்குதலின்போது எதிர்க்கட்சிகள் இந்திய பாதுகாப்பு படைகளின் வீரத்தை சந்தேகப்பட்டன.
ஊழல் ஒன்று மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் அந்த கட்சி அதை மட்டுமே நேர்மையாக செய்தது. சமீபகாலமாக காங்கிரஸ் தரகர்களின் வீடுகளில் இருந்து பெட்டிகள் நிறைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது ஓட்டுகளை விலைக்கு வாங்கும் அவர்களது அரசியல் கலாசாரத்தை காட்டுகிறது.
அவர்கள் கடந்த 6 மாதமாக காவலாளி தான் திருடன் என்று கூறிவருகிறார்கள். ஆனால் பணம் எங்கிருந்து வெளியே வந்தது. யார் உண்மையான திருடன்?
ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. அப்போது தான் பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதால் பாகிஸ்தானும் அதையே விரும்புகிறது. தேசவிரோத சட்டத்தை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. பாகிஸ்தானும் இதை விரும்புகிறது. இந்தியாவுக்கு எதிராக வேலை செய்பவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதுபோன்று பேசுபவர்களை நீங்கள் நம்புகிறீர்களா? அவர்களால் நாட்டை பாதுகாக்க முடியுமா? கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற எனது பெரிய சாதனைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் கலந்துகொண்டனர்.