கோடநாடு வழக்கு, ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - வக்கீலை மாற்றுவதாக நீதிபதியிடம் தகவல்


கோடநாடு வழக்கு, ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - வக்கீலை மாற்றுவதாக நீதிபதியிடம் தகவல்
x
தினத்தந்தி 10 April 2019 11:30 PM GMT (Updated: 10 April 2019 6:37 PM GMT)

கோடநாடு வழக்கு விசாரணைக்கு ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது தங்களது வக்கீலை மாற்றுவதாக நீதிபதியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஷயான், மனோஜ், திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகிய 5 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். ஷயான் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவரை ஜாமீனில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் நேற்று கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜாமீனில் உள்ள உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர்அலி, ஜித்தின்ராய் ஆகியோர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். ஷயான் உள்பட 5 பேர் கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி வடமலை கோடநாடு வழக்கு சம்பந்தமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றார்.

இதையடுத்து வழக்கில் தொடர்புடைய 10 பேரும் தங்களது வக்கீல் சிவக்குமாரை மாற்ற போவதாக கூறினர். மேலும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கும்படி அவர் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டு, மீண்டும் புதிய வக்கீல் மூலம் மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.

ஆனால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பலமுறை கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால், இன்று(நேற்று) குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு வக்கீல் பாலநந்தகுமார் வாதிட்டார். அதன்பின்னர் வேறு வக்கீலை நியமிக்கவும், மனுத்தாக்கல் செய்யவும் காலஅவகாசம் வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு(வெள்ளிக்கிழமை) நீதிபதி தள்ளி வைத்தார். இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. 

Next Story