கோபியில் கட்டையால் அடித்து தொழிலாளி கொலை தப்பி ஓடிய அண்ணன்– தம்பிக்கு வலைவீச்சு


கோபியில் கட்டையால் அடித்து தொழிலாளி கொலை தப்பி ஓடிய அண்ணன்– தம்பிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 April 2019 5:00 AM IST (Updated: 11 April 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

கோபியில் கட்டையால் அடித்து தொழிலாளியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி தாசப்பன் வீதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் மணிகண்டன் (26).

அதே வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மூத்த மகன் கார்த்தி (24), இளைய மகன் வசந்த் (22). கூலித்தொழிலாளர்கள்.

அண்ணன், தம்பி இருவருக்கும் குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி மது குடித்துவிட்டு விஸ்வநாதன் வீட்டு வாசலில் போய் நின்றுகொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக விஸ்வநாதனுக்கும், அண்ணன்–தம்பிக்கிடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 8–ந் தேதி இரவு மீண்டும் கார்த்தியும், வசந்தும் மதுபோதையில் விஸ்வநாதனின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றுகொண்டு தகாத வார்த்தைகள் பேசியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த விஸ்வநாதன், ‘ஏன், இப்படி வம்பு பண்ணுகிறீர்கள். மதுகுடித்தால் உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள். என்னிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்?‘ என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தியும், வசந்தும் சேர்ந்து அருகே கிடந்த கட்டையை எடுத்து விஸ்வநாதனை பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் ‘அய்யோ அம்மா‘ என்று அலறினார்.

தந்தையின் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த மணிகண்டன் கார்த்தியையும், வசந்தையும் தடுத்துள்ளார். அப்போது அவரையும் அண்ணன், தம்பி இருவரும் தாக்கினார்கள். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். அதனால் கார்த்தியும், வசந்தும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்கள்.

அதன்பின்னர் படுகாயத்துடன் கிடந்த தந்தையையும், மகனையும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக விஸ்வநாதன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் கோபி போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து கார்த்தியையும், வசந்தையும் தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் விஸ்வநாதன் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, கார்த்தியையும், வசந்தையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் விஸ்வநாதனின் உறவினர்கள் மற்றும் தாசப்பன் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை 4 மணி அளவில் கோபி நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டார்கள். பின்பு ஈரோடு– சத்தி ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் போலீசாருடன் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், ‘விஸ்வநாதனை கொலை செய்த கார்த்தி, வசந்த் ஆகியோரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தார்கள். அதற்கு போலீசார் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம். சட்டப்படி அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று உறுதி அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டார்கள்.


Next Story