திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் கலெக்டர் தகவல்


திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 April 2019 11:00 PM GMT (Updated: 10 April 2019 7:11 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் பொருத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இந்த பணிகளை தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 75 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 372 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வது மற்றும் அங்குள்ள அலுவலர்களின் செயல்பாடுகள், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆன்லைன் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.

வாக்காளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்டு), ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை அடையாளச் சான்றாக வாக்குச் சாவடிகளில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை மறுநாள் 3-வது பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் அஞ்சல் வாக்குகளை செலுத்தலாம்.

இந்த முறை வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு மையங்களுக்கு அழைத்து செல்வதற்கும், வாக்குப் பதிவு முடிந்தவுடன் திரும்பி அழைத்து வருவதற்கும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், மருத்துவமனை முதல்வர் வாணி, கண்காணிப்பாளர் ஷகீல்அகமது, துணை கண்காணிப்பாளர் குப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story