வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை

பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காட்பாடி,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வீடு உள்பட 8 இடங்களில் தேர்தலில் பயன்படுத்துவதற்காக அதிக அளவில் பணம் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த 29-ந் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில் செலவின கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேலாக பணம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உரிய அனுமதி பெற்று சோதனை செய்தனர்.
அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் ரூ.19 லட்சத்து 57 ஆயிரத்து 10 இருந்ததாகவும், தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது கையிருப்பு தொகை ரூ.9 லட்சம் இருப்பதாகவும் வேட்பாளர் கதிர்ஆனந்த் தகவல் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இத்தொகை போக ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்து 10 மட்டும் கைப்பற்றப்பட்டது. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்புமனு தாக்கலின்போது தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் தன்னிடமும், தனது மனைவி சங்கீதாவிடமும் ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்து 450 மட்டும் கையிருப்பில் பணமாக உள்ளதாக உறுதிமொழி அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி வருமான வரித்துறையினர் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரத்து 800 கைப்பற்றப்பட்டது. பின்னர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் தன்னிச்சையாக வருமான வரித்துறையினரிடம் தொடர்பு கொண்டு மேற்படி தொகை தன்னை சார்ந்தது எனவும், அந்த தொகை வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக தான் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கலின்போது வழங்கிய உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்தமைக்காகவும் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள நிகழ்விற்காகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் செலவின மைய ஒருங்கிணைப்பு அலுவலர் காட்பாடி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்ய காட்பாடி மாஜிஸ்திரேட்டு ஜெயசுதாகரிடம் அனுமதிகோரி காட்பாடி போலீசார் விண்ணப்பித்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு ஜெயசுதாகர் நேற்று காலை உத்தரவிட்டார். அதன்பேரில் காட்பாடி போலீசார், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் பூஞ்சோலை சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






