தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாதது கேரளாவில் மு.க.ஸ்டாலின் யாரை ஆதரிப்பார் எடப்பாடி பழனிசாமி கேள்வி


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாதது கேரளாவில் மு.க.ஸ்டாலின் யாரை ஆதரிப்பார் எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 10 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-11T01:20:15+05:30)

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாதது. கேரளாவில் மு.க.ஸ்டாலின் யாரை ஆதரிப்பார் என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அரியலூர்,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அரியலூர் பஸ் நிலையம் அருகேயும், ஜெயங்கொண்டம் கடைவீதியிலும் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். நாட்டின் வலிமையான பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் ஒரு மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவர் பேசி வருகிறார். பிரதமர் மோடியையும், என்னையும் (எடப்பாடி பழனிசாமி), டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாசையும் விமர்சித்து பேசி வருவதோடு மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசி வருகிறார். மு.க.ஸ்டாலினிடம் தலைவருக்கான தகுதி இல்லை.

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். தமிழகத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் எதிர்த்து போட்டியிடுகிறது. இதற்கு பெயர் தான் சந்தர்ப்பவாத கொள்கை இல்லாத கூட்டணி ஆகும். நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் நாட்டில் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டை ஆதரிக்கும் மு.க.ஸ்டாலின், கேரளாவில் யாரை ஆதரிப்பார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களும் நடைபெறாதது போல் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்த எல்லா திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கு பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர்கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. மின்சார உற்பத்தியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசின் பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. இவை யாவும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா? தேர்தல் பிரசாரத்தில் ஆட்சியில் இருந்த போது செய்த திட்டங்களை பற்றி பேச முடியாததால், எதை எதையோ? மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

15 ஆண்டு காலம் மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த போது நாட்டிற்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. வீட்டை மட்டும் கவனித்து வளமாகினார்கள். மக்களுக்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நான் தேர்தல் பிரசாரங்களுக்கு கிராமங்களில் செல்லும்போது என்னை பார்த்து சாலையில் நிற்கும் ஒருவரோ அல்லது இரண்டு பேரோ கையெடுத்து கும்பிடும் போது, நான் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தி வருகிறேன். நான் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு மரியாதை தெரியும். என்னை ஒருவர் மதிக்கும் போது நான் பதிலுக்கு மதிக்கிறேன். நகரத்தில் வாழ்ந்த ஸ்டாலினுக்கு இந்த பண்பு தெரியாது. ஏதோ நான் செல்லும் இடங்களில் ஆள் இல்லாததை போல் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் ரூ.750 கோடியில் விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, விரைவில் உற்பத்தி தொடங்கவுள்ளது. கீழப்பழுவூர் அருகே திடீர்குப்பம், குரும்பன்சாவடியில் குடிசை மாற்று வாரியத்தால் 776 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. மருதையாற்றின் குறுக்கே பெரிய திருக்கோணம் சாலையில் ஒரு உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். அரியலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே ரூ.12 கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கவுள்ளது. ஜெயங்கொண்டத்தில் ரூ.22 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளது. ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையம் திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர் பகுதியில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story