காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு


காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 10 April 2019 10:30 PM GMT (Updated: 10 April 2019 7:57 PM GMT)

காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4,122 வாக்குசாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி, சோழிங்கநல்லூர் தொகுதியில் 3,021 பேர் பணியில் ஈடுபடுவார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் 1,270 பேரும், மாவட்டத்துக்கு உட்பட்ட 5,647 பேர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றுபவர்கள் 828 பேர் என மொத்தம் 7,745 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர். அவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட உள்ளனர்.

அதேபோல் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி சான்றிதழ் பெற்றவர்கள் 6,601 பேர், மாவட்டத்துக்கு உட்பட்டவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பணியாளர்கள் 3,425 பேர் என மொத்தம் 10,026 பேர் தபால் ஓட்டுகளை போட உள்ளனர்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணி சான்றிதழ் பெற்றவர்கள் (அந்தந்த வாக்குச்சாவடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள்), மாவட்டத்துக்கு உள்ளேயும், வெளிமாவட்டத்தில் இருந்து வந்தும் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றவுள்ள மொத்தம் 20,792 பேர் தபால் ஓட்டு போட உள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 21,193 மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட உள்ளனர். அவர்களுக்கென மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி காஞ்சீபுரம் தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி எடையாம்புதூரில் உள்ள 289–வது வாக்குச்சாவடியில் மட்டும் மொத்தம் 46 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர்.

பார்வையற்ற ஒருவர், வாய் பேச முடியாமல், காது கேளாமல் இருப்பவர்கள் 9 பேர், இதர உடல் ஊனமுற்றோர் 36 பேர் என மொத்தம் 46 பேர் இந்த ஒரே வாக்குச்சாவடியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கென சக்கர நாற்காலி, வாக்களிக்க சென்று வருவதற்கான வசதி, சாய்வுதளம், மொழி சைகை உதவியாளர்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் செய்து தருமாறு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அறிவுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள 37 லட்சத்து 60 ஆயிரத்து 771 வாக்காளர்களுக்கும் வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

அதையொட்டி, மொத்தம் உள்ள 4,122 வாக்குசாவடிகளுக்கு, வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களிடம் ‘பூத் சிலிப்‘ வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்டோர் விரைவுபடுத்தியுள்ளனர்.


Next Story