ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் இலவச வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி
ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் இலவச வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி உறுதி அளித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஏ.கோவிந்தசாமி தொகுதியின் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரை ஆதரித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனிடையே அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி நேற்று சிக்கம்பட்டி, பெரியண்ணன்கொட்டாய், வே.முத்தம்பட்டி, கிட்டம்பட்டி தண்டா, ஜொல்லன்கொட்டாய், அத்திமரத்தூர், மஞ்சநாயக்கன்தண்டா, வேப்பமரத்தூர், ஆலமரத்துகொட்டாய், கருங்கல்லூர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பிலும், நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார். அப்போது கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி பேசுகையில், தமிழக அரசின் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழும் பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பொதுமக்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். என்னை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் இலவச வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது அ.தி.மு.க. விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் உலக மாதேஸ், ஊராட்சி செயலாளர் சக்கரபாணி, பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. இல.வேலுசாமி, ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமச்சந்திரன், முனுசாமி, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பா.ஜனதா மாவட்ட பொருளாளர் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story