ஆலங்குடியில் எச்.ராஜா பிரசாரத்தின் போது தகராறு: அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து


ஆலங்குடியில் எச்.ராஜா பிரசாரத்தின் போது தகராறு: அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 10 April 2019 10:30 PM GMT (Updated: 10 April 2019 8:24 PM GMT)

ஆலங்குடியில் எச்.ராஜா பிரசாரத்தின் போது ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாஞ்சான் விடுதியில் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா பிரசாரம் செய்தார். பின்னர் அவர் அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு சென்று விட்டார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் ரவி (வயது 35) என்பவருக்கும், குடிபோதையில் இருந்த சின்னத்துரை என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிப்போய் 2 பேரும் கட்டிப் பிடித்து ரோட்டில் உருண்டுள்ளனர்.

இதையடுத்து சின்னத்துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவி தோள்பட்டையில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ரவி கூறுகையில், சின்னத்துரை என்பவர் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வருவார். இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா பிரசாரம் செய்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் சின்னத்துரை சிலருடன் சேர்ந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது சின்னத்துரை கத்தியால் என் தோள் பட்டையில் குத்திவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார், என்று கூறினார். 

Next Story