பெண் மீது அரிப்பு பொடி தூவி வீடு புகுந்து ரூ.6 லட்சம் திருடிய 2 பேர் கைது


பெண் மீது அரிப்பு பொடி தூவி வீடு புகுந்து ரூ.6 லட்சம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2019 4:15 AM IST (Updated: 11 April 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் பணம் எடுத்துச்சென்ற பெண் மீது அரிப்பு பொடியை தூவி வீடு புகுந்து ரூ.6 லட்சத்தை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

மூலக்குளம்,

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 55), கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி சாந்திமதி (45). இவர்களுக்கு பொன்னி, தாமரை என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ரங்கநாதனின் தாயார் பார்வதியும் வசித்து வருகிறார்.

ரங்கநாதனின் உறவினர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்காக கடன் வாங்கி இருந்தனர். அந்த கடன் தொகையை அடைப்பதற்காக வீட்டில் இருந்து நகைகளை அடகு வைத்தனர். பின்னர் அந்த பணத்தை எடுப்பதற்காக சாந்திமதி, தனது மூத்த மகள் பொன்னியுடன் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மொபட்டில் கடந்த மாதம் (மார்ச்) 16-ந் தேதி சென்றார்.

வங்கியில் இருந்து அவர்கள் ரூ.6 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையில் வைத்து வீட்டிற்கு புறப்பட்டனர்.அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று நூதன முறையில் கண் இமைக்கும் நேரத்தில் சாந்திமதி மீது அரிப்பு பொடியை தூவியது. மொபட்டை ஓட்டிய பொன்னி, தாயாரை வீட்டில் இறக்கிவிட்டு, வெளியே சென்றார். வீட்டிற்கு வந்தவுடன் சாந்திமதிக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. எனவே வங்கியில் எடுத்துவந்த ரூ.6 லட்சத்தை வீட்டில் உள்ள மேஜை மீது வைத்துவிட்டு அவருடைய அறைக்கு குளிக்க சென்றுவிட்டார். அப்போது சாந்திமதி மீது அரிப்பு பொடி தூவிய மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து அவருடைய வீட்டிற்குள் புகுந்து ரூ.6 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர்.

பணத்தை பறிகொடுத்த சாந்திமதி போலீசில் புகார் செய்தார்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த வழக்கில் 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடினர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டவுடன் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். உடனே உஷாரான போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள், திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த அருண்பாண்டியன் (22), மூர்த்தி (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி சாந்திமதி வீட்டில் புகுந்து ரூ.6 லட்சத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அருண்பாண்டியன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவு போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா, வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story