கரூர் மாவட்டத்தில் 869 போலீசார் தபால் வாக்கு பதிவு


கரூர் மாவட்டத்தில் 869 போலீசார் தபால் வாக்கு பதிவு
x
தினத்தந்தி 11 April 2019 4:30 AM IST (Updated: 11 April 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 869 போலீசார் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

கரூர்,

வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போலீஸ் துறையினர் தபால் மூலம் தங்களது வாக்குகளை அளிக்கும் வகையில் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அன்பழகன், தேர்தல் பொதுபார்வையாளர் பிரசாந்த்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய வந்திருந்த போலீசாரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன், தபால் வாக்குகளை அளிப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும், எவ்வாறு படிவத்தை பூர்த்தி செய்து அதை முறையாக மடித்து மேலுறையில் கையொப்பமிட்ட பிறகே பெட்டிக்குள் போட வேண்டும் என்ற விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், நேற்று தபால் வாக்குகளை போடும் பெட்டி காலியாக இருப்பது காண்பிக்கப்பட்டு பின்னர் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தபால் வாக்குகளை பதிவு செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடந்தது. இந்த சேவை மையத்தில் வாக்களிக்க வரும் போலீசார் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் எந்த பாகத்தில் எந்த தொடர் எண்ணில் அமைந்துள்ளது என்பது குறித்த தகவல்களை அவர்களுக்கு வழங்கி உதவும் வகையில் போதிய அளவிலான சட்டமன்றத்தொகுதி வாரியாக கணினி வசதியுடன் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், தபால் வாக்களிக்கும் படிவத்தில் கையொப்பமிட சான்றளிக்கும் அலுவலர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

போலீஸ் துறையை பொருத்தவரை கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 70 பேரும், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 242 பேரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 136 பேரும், குளித்தலை சட் டமன்ற தொகுதிக்குட்பட்ட 101 பேரும், பிறமாவட்டங்களை சேர்ந்த 320 பேர் உள்பட மொத்தம் 869 பேர் பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்கு படிவங்களை அதற்கான பெட்டிகளில் போட்டனர். அப்போது, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் துரைராஜ், கல்யாண்குமார், காமராஜ், தபால் வாக்குப்பதிவிற்கான (பொறுப்பு) அலுவலர் லீலாவதி, ஆய்வாளர் சந்தோஷ்குமார், ஊர்க்காவல்படை வட்டார தளபதி சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். 

Next Story