அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 11 April 2019 4:30 AM IST (Updated: 11 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:–

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், பதிவு பெறாத தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் அன்றாடம் காட்சிகள் 60 வயது ஆன பின்னர் என்ன செய்வார்கள்? தான் பிள்ளைகள், பேரன்–பேத்தி, உறவுகளை நம்பி தான் வாழ வேண்டி உள்ளது. அதற்காகத்தான் முதல்–அமைச்சர் அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதற்கும் தி.மு.க.வினர் தடைபெற்று விட்டனர். தேர்தல் முடிந்த பின்னர் நிதி உதவி உறுதியாக வழங்கப்படும்.

பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தேசிய நதிநீர் திட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்று உள்ளார். அதற்கான நான் அவரை பாராட்டுகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன். தேசிய நதிநீர் திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்ற வலிமையான பிரதமர் பதவி ஏற்க வேண்டும். எனவே பிரதமர் மோடி தேர்தல் முடிந்த பின்னரும் மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க வேண்டும். அப்போது தான் நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். தி.மு.க.வினர், வருமானவரித்துறையினர் துரைமுருகனை துன்புறுத்தியதாக கூறுகிறார்கள். வருமானவரித்துறையினர் சோதனையின் போது எந்த துன்புறுத்தலும் இருக்காது. கணக்கில் காட்டப்படாத பணம் இருந்தால் அதற்கு கணக்கு கேட்பார்கள். தி.மு.க.வினர் அடுத்தவர்களை குற்றம்சாட்டியே கட்சியை நிலை நிறுத்த பார்க்கிறார்கள்.

அரசு ஊழியர்களின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது என்பது சரியல்ல. அரசு ஊழியர்களின் ஓட்டுக்கள் அதிக அளவு அ.தி.மு.க. கூட்டணிக்கே கிடைக்கும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த தவறும் செய்யாதவர். தன்னுடன் இருப்பவர்கள் யாரையும் தவறு செய்ய அனுமதிக்க மாட்டார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்திய அரசு மூலம் இந்திய கடல் எல்லை பகுதியில் ராணுவ கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தடுக்கப்படும். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது தி.மு.க.வும், காங்கிரம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்கள் பிரச்சினை பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை.

தினகரன் அணியினர் அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்தாவிட்டாலும், அ.தி.மு.க. கரை வேட்டியை இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள். அதை பயன்படுத்த கூடாது. டி.டி.வி. தினகரனை அவரது மாமன், மச்சான் உள்ளிட்ட உறவினர்கள் கூட மதிப்பது இல்லை.

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் தற்போது குடிநீர் பிரச்சினை பற்றி பேசுகிறார். பட்டாசு பிரச்சினை பற்றி பேசுகிறார். 5 வருடங்களாக எங்கே சென்றிருந்தார். சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


Next Story