தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 10 April 2019 8:31 PM GMT)

கரூரில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் தேர்தல் நுண்பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த்குமார் முன்னிலையில் வகித்தார்.

கூட்டத்தில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வாக்குப்பதிவு தொடங்கும் முன்பாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகின்றதா என்று கண்காணித்தல், அவ்வாறு ஏதேனும் நிகழ்வு நடப்பதை அறிந்தால் உடனடியாக தேர்தல் பொது பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நுண்பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்டபட்ட பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 69 வாக்குச்சாவடி மையங்களில் இந்த தேர்தல் நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள இவர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக அதற்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 13-ந்தேதி வெண்ணமலை சேரன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு அளிக்கும் சேவை மையத்தில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.

அதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் ஆகியவை செயல்படும் விதம் குறித்து அனைவருக்கும் செயல் விளக்கத்துடன் காட்டப் பட்டது.

கூட்டத்தில், உதவி கலெக்டர்கள் கண்ணன், கணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், நுண்பார்வையாளர்களுக்கான பொறுப்பு அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story