தி.மு.க. வெற்றி பெற்றால் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளரும் மதுரையில் சரத்குமார் பேச்சு
தி.மு.க. வெற்றி பெற்றால் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளரும் என்று மதுரையில் சரத்குமார் பேசினார்.
மதுரை,
மதுரை அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக மதுரை முனிச்சாலை, ஜெய்ஹிந்த்புரம் ஆகிய பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ, வேட்பாளர் ராஜ்சத்யன், கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரசாரத்தின் போது சரத்குமார் பேசியதாவது:–
மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன், தனது பெயரிலேயே சத்தியத்தை வைத்திருக்கிறார். இளைஞர். பண்பாளர். தொலை நோக்கு சிந்தனை உடையவர். மதுரை எப்படி இருக்க வேண்டும், தான் வெற்றி பெற்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து வைத்து இருக்கிறார். மதுரையில் அவரது வெற்றி உறுதி. அவர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
கடந்த 2011–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றவுடன், தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினார். அவர் விட்டு சென்ற பணிகளையும், எண்ணங்களையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். அவர் மிக சிறந்த ஆளுமை திறன் கொண்டவர். மாறுபட்ட கருத்து உடையவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து இங்கு அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். இதற்கு காரணம், நிலையான, வலுவான, வலிமையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்கு தான்.
இந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆட்சியின் குறைகளை பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் இந்த ஆட்சியில் குறைகள் இல்லை. சிறந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் போது தான் மின்வெட்டு இருந்தது. மக்கள் பிரச்சினைகள் இருந்தன. ஸ்டாலின் தோல்வி பயத்தால் தனி நபர் விமர்சனம் செய்கிறார்.
ஸ்டாலின், பா.ஜனதா கட்சியை மதவாத கட்சி என்கிறார். அதாவது அவர் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி. இல்லையென்றால் கெட்ட கட்சி. கடந்த 1999–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பா.ஜனதா கட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. முக்கிய மந்திரி பதவிகளை பெற்று கொண்டு ஆட்சி சுகத்தை அனுபவித்தனர். அதன்பின் 2004–ம் முதல் 2014–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்த்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். காங்கிரசும், தி.மு.க.வும் ஆட்சியில் கொள்ளை தான் அடித்தனர்.
கடந்த 2006–ம் அகஸ்தா ஊழல், 2008–ம் ஆண்டு 2ஜி ஊழல், 2010–ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2012–ம் ஆண்டு நிலக்கரி ஊழல். இவை எல்லாம் உதாரணங்கள் தான். ஆட்சி முழுக்க ஊழல் தான் நடந்தது. தி.மு.க. வெற்றி வெற்றால் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளரும். பொதுமக்களுக்கு எந்த நலனும் கிடைக்க போவதில்லை.
காங்கிரசும், தி.மு.க.வும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். 5 கோடி குடும்பத்துக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் தருவதாக கூறுகின்றனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவை. அதற்கு நிதி இல்லை. நாட்டில் சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடி தான் ஒதுக்குகிறார்கள். மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்றால் 2ஜி மூலம் ஊழல் செய்த பணத்தை தான் காங்கிரசும், தி.மு.க.வும் மக்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.