வடமதுரை அருகே, அங்கன்வாடி பெண் ஊழியர் மர்ம சாவு
வடமதுரை அருகே அங்கன்வாடி பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கஸ்பா அய்யலூரை சேர்ந்தவர் ஹரிகிஷ்ணன். அவருடைய மனைவி பத்மாவதி (வயது 50). இவர் குப்பாம்பட்டி அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுடைய மகள் மல்லிகா (31). இவருக்கும், சரவணக்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் சரவணக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துக் கொண்டு மல்லிகா தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். சம்பவத்தன்று மாமியார் வீட்டுக்கு சென்ற சரவணக்குமார், குடும்பம் நடத்த வருமாறு மல்லிகாவை அழைத்துள்ளார். அதற்கு மல்லிகா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் கட்டையால் மல்லிகாவை தாக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பத்மாவதி தடுக்க முயன்றார். அப்போது சரவணக்குமார் பத்மாவதியை தாக்கி விட்டு தப்பி சென்றார்.
இதில் காயமடைந்த பத்மாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று பத்மாவதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பத்மாவதி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து வடமதுரை போலீசில் மல்லிகா புகார் செய்தார். அதில் தனது கணவர் தாக்கியதில் தான் தாயார் பத்மாவதி இறந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம சாவு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story