போடி அருகே, பள்ளி மாணவர் மர்ம சாவு - மின்சாரம் பாய்ந்ததா? என போலீஸ் விசாரணை


போடி அருகே, பள்ளி மாணவர் மர்ம சாவு - மின்சாரம் பாய்ந்ததா? என போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 April 2019 4:15 AM IST (Updated: 11 April 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே கோவில் திருவிழாவையொட்டி கரகம் எடுக்க சென்றபோது பள்ளி மாணவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் மீது மின்சாரம் பாய்ந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி,

போடியை அடுத்த அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் சுபாஷ் (வயது 17). இவர் போடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். அந்த கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தெருவில் குழல் விளக்குகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரகம் எடுக்க கொட்டக்குடி ஆற்றுக்கு பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்குள்ள விநாயகர் கோவில் அருகே இரும்பு கம்பத்தில் ஒன்றில் குழல் விளக்கு கட்டியிருந்தனர். ஊர்வலத்தில் வந்த சுபாஷ் அந்த பகுதியில் இருந்த இரும்பு கம்பத்தை பிடித்ததாக தெரிகிறது. அப்போது அவர் சுருண்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் சுபாஷ் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த போடி தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து சுபாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவர் மின்சாரம் தாக்கி இறந்ததாரா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். கோவில் விழாவில் பள்ளி மாணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story