கூடலூர், முதுமலை வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கொன்றை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் கூடலூர், முதுமலை பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாகி வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. முதுமலை வனப்பகுதியில் மட்டும் காட்டுத்தீ பரவி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு செடி, கொடிகள் கருகி உள்ளன. மேலும் மரங்களிலும் இலை உதிர்ந்து வருகிறது.
சமவெளி பகுதியில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். ஆனால் வனப்பகுதிகள் பசுமை இழந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இருப்பினும் பசுமை இழந்த வனப்பகுதியில் கொன்றை மலர்கள் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்குகின்றன. கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். கேரளாவில் சித்திரை மாதம் கொண்டாடப்படும் விஷூ பண்டிகையில் கொன்றை மலர்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதனால் கொன்றை மலர்கள் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கும். இந்த நிலையில் முதுமலை, மசினகுடி பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்ததால் வறட்சியின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
சமவெளியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் நீலகிரிக்கு வருகிறோம். கூடலூர் பகுதியிலும் வறட்சி அதிகமாக உள்ளதை உணர முடிகிறது. தேயிலை தோட்டங்களை தவிர வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது. இருப்பினும் வனத்தில் பூத்துள்ள கொன்றை மலர்கள் காண்போரை ரசிக்க வைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story