“தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன்; மோடி வில்லன்” திருச்சி பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


“தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன்; மோடி வில்லன்” திருச்சி பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 April 2019 11:15 PM GMT (Updated: 10 April 2019 8:42 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன், மோடி வில்லன் என்று திருச்சியில் நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இரவு திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். குடும்பம், குடும்பமாக, அலை அலையாக வந்து ஆதரவு தெரிவித்து விட்டு செல்கிறார்கள். தி.மு.க.வினர் ஆதரவு தருவது மட்டும் இன்றி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பல இடங்களில் அவர்களது பிரசார வாகனங்கள் நம்மை கடந்து சென்றபோது வாகனங்களை நிறுத்திவிட்டு வந்து நீங்க ஜெயிச்சிட்டீங்க போங்க என கூறி கைக்குலுக்கி விட்டு செல்கிறார்கள்.

நான் அவர்களிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்கள் மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழி இல்லை. 2 அடிமைகளிடம் சிக்கி நாங்கள் தவிக்கிறோம். அந்த அம்மா இருந்தவரை கொஞ்சமாவது மரியாதை இருந்தது. அவங்க மறைந்த பின்னர் கொஞ்சம் இருந்த மரியாதையும் போய்விட்டது. அதனால் தான் இப்படி பேசுகிறோம் என்றார்கள்.

ஏப்ரல் 18... மோடிக்கு கெட் அவுட்டு. நீட் தேர்வு கொண்டு வந்து தமிழக மாணவி அனிதா சாவுக்கு காரணமான மோடியை பழி வாங்கவேண்டுமா? இல்லையா? அதற்கான தேதி தான் ஏப்ரல் 18. மோடியை மட்டும் வீட்டுக்கு அனுப்ப போவது இல்லை. ராகுல் காந்தியை பிரதமராக உட்கார வைக்கப்போகிறது.

அதோடு தமிழகத்தில் மோடியின் அடிமைகள் 2 பேரையும் வீட்டுக்கு அனுப்ப போகிறோம். தி.மு.க. தேர்தல் அறிக்கை நாடாளுமன்ற தேர்தலின் கதாநாயகன் என எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். கதாநாயகன் இருந்தால் ஒரு வில்லன் இருக்கனும். யார் அந்த வில்லன். மோடி தான் வில்லன்.

எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர். இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு கருணாநிதி மரணத்தின் போது அவர் நடந்து கொண்ட விதம் தான். நமது தலைவர் அவரது கையை பிடித்து கெஞ்சியும் கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்வதற்கு 6 அடி இடம் தர மறுத்து விட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விடிய விடிய விவாதம் நடந்தது. நீதி வென்றது. மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யலாம் என தீர்ப்பு வந்தது. இறந்த பின்னரும் போராட்டம் நடத்தி வென்றவர் கருணாநிதி.

கொஞ்சம் கூட இரக்கம் இன்றி கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கொடுக்க மறுத்த ஆட்சியை தூக்கிப் போட்டு மிதிக்கும் நேரம் வந்து விட்டது. ஏப்ரல் 18 அன்று நீங்கள் அளிக்கும் வாக்கு தி.மு.க. கூட்டணியை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும். அதேபோல் 18 தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும் நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். மே 19-ந்தேதி நடைபெற உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற செய்யவேண்டும். மே 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை.

ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாள். அன்று நமது தலைவரை (ஸ்டாலின்) தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரவைக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்து இருக்கிறது. அதனை தவறவிட்டு விடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story