பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 10 April 2019 11:00 PM GMT (Updated: 10 April 2019 8:54 PM GMT)

பா.ஜனதா தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

களியக்காவிளை,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் களியக்காவிளை பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் அங்குள்ள பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள், காய்கறி சந்தை, மீன் சந்தையில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த், நதிநீர் இணைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது மிகவும் மன நிறைவாக இருந்தது. தமிழர்கள் எந்த உணர்வோடு இருப்பார்களோ அந்த உணர்வோடு நதிகளை இணைக்க வேண்டும் என்ற முடிவை பா.ஜனதா எடுத்து, அதற்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருப்பதை அவர் மனப்பூர்வமாக வரவேற்று இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நதிநீர் இணைப்பு குழு அமைத்து ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அந்த நேரத்திலும் அதை ரஜினிகாந்த் வரவேற்றார். இப்போதும் வரவேற்று இருப்பதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கட்டாயமாக நதிநீரை இணைக்க வேண்டும். மீண்டும் கங்கை-காவிரி இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அதில் என்னுடைய ஆசை என்னவென்றால் காவிரியுடன் தாமிரபரணியையும் இணைக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறு செய்தால் தமிழகத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது.

குமரி மாவட்டத்துக்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நான் எந்த திட்டங்களையும் நிறைவேற்றாதது போல் பேசியிருக்கிறார். அவர் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வரும் போது மார்த்தாண்டம், நாகர்கோவில் பார்வதிபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் வழியாக வந்தாரா? வரும் வழியில் நான்கு வழி சாலைப் பணிகள் நடப்பதை அவர் பார்க்கவில்லையா? காரில் வரும் போது அவர் ஒருவேளை தூங்கியிருந்தால் அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்பி வரும் வழியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை காட்டியிருக்க வேண்டும். அப்போது அவருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும். மேலும் இரட்டை ரெயில் பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த போது நாங்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமார், தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் ஆகியோர் பங்கேற்றது ஸ்டாலினுக்கு தெரியாதா? என்று கேட்க விரும்புகிறேன்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் பனங்காலை, படந்தாளுமூடு, மேக்கோடு, பரக்குன்று, செம்மங்காலை, வட்டவிளை, மேல்புறம், ஆலுவிளை, திக்குறிச்சி உள்பட விளவங்கோடு தொகுதிக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் அவர் நேற்று தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story