‘மோடி அரசை அகற்றுங்கள்’ செஞ்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு


‘மோடி அரசை அகற்றுங்கள்’ செஞ்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 11 April 2019 4:45 AM IST (Updated: 11 April 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

‘மோடி அரசை அகற்றுங்கள்’ என்று செஞ்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் கூறினார்.

செஞ்சி,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஷாஜி, விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அன்பின்பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கணேஷ் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். ஆரணி தொகுதி வேட்பாளர் ஷாஜி வரவேற்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் விழுப்புரம் (தனி) அன்பின்பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

செஞ்சி கோட்டையை இந்த அரசு சுற்றுலா தலமாக்கி இருக்க வேண்டாமா?. இங்கு எல்லா வசதிகளும் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். இந்த பகுதியில் குடியிருப்பவர்களுக்கே குடிநீர் இல்லை. பிறகு எப்படி சுற்றுலா பயணிகள் செஞ்சிக்கோட்டைக்கு வருவார்கள். செஞ்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வேண்டும்.

ஒரு விவசாய சந்தை வேண்டும். விளை பொருட்களை பதப்படுத்தி வைக்க குளிர்சாதன கிடங்கு வேண்டும். இதை எல்லாம் குரல் எழுப்பி செய்து கொடுக்க ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்து இங்கு நிறுத்தி உள்ளேன். நீங்கள் அவரை வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆரணி வேட்பாளர் ஷாஜி உங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார். அவர் அடிக்கடி இங்கு வந்து மக்களை சந்திப்பார். எனவே அவருக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களியுங்கள்.

எனக்கு அனுமதி கொடுத்து மறுக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் மலைவாழ் மக்கள் டார்ச் லைட்டை உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் டார்ச் லைட் என்பதால், அதை இரவு 10 மணிக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்று கெடுபிடி செய்கிறார்கள். அவர்களே டார்ச் லைட் எந்த கட்சியின் சின்னம் என்று மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். அவர்கள் செய்யும் கெடுபிடியே எங்களுக்கு சாதகமாக இருக்கிறது.

இந்த அரசு மத்தியிலும், மாநிலத்திலும் வேணுமா? மோடி அரசை அகற்றுங்கள், அது உங்களால் முடியும். அதற்கான விதையை நாடாளுமன்ற தேர்தலில் விதையுங்கள், நாங்கள் துணிந்தது போல் நீங்களும் போராடுங்கள். தமிழகத்தை மாற்றுவோம் அதற்கு ஆரணி நாடாளுமன்ற வேட்பாளர் ஷாஜி, விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அன்பின்பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணேஷ் ஆகியோருக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து இந்த அரசுகளுக்கு புதிய பாடம் கற்றுக் கொடுங்கள். , நாளை நமதே. இவ்வாறு அவர் பேசினார். 

Next Story