நெல்லையில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: காரில் கொண்டு செல்லப்பட்ட 82 மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
நெல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் கொண்டு செல்லப்பட்ட 82 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை மாநகர பகுதியில் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் கூட்டுறவு சார் பதிவாளர் முருகேசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ஏட்டுகள் மனோகரன், முருகேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில், காரில் மதுபாக்கெட்டுகள் இருந்தது. விசாரணையில் காரில் வந்தவர், பாப்பாக்குடி அருகே உள்ள மருதமுத்தூரை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பதும், மொத்தம் 82 மதுபாக்கெட்டுகளை அவர் கொண்டு சென்றதும் தெரியவந்தது. அவர் இந்த மதுபாக்கெட்டுகளை, பெங்களூருவில் இருந்து தனது ஊருக்கு நண்பரின் திருமணத்திற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனாலும் 82 மதுபாக்கெட்டுகளையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வாகன சோதனைச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படையினர் துணை ராணுவத்தினருடன் சேர்ந்து நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் சோதனை நடத்தியபோது அதில் 4 வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன.
இதை துணை ராணுவத்தினர் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது காரில் வந்தவர்கள் தாங்கள் குடிப்பதற்கு மது வாங்கி செல்வதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களிடம் மதுபாட்டில்கள் ஒப்படைக்கப்பட்டன.
நெல்லை மாநகர பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும் தேர்தல் பறக்கும் படையினர் சரியான முறையில் சோதனையில் ஈடுபடுகிறார்களா? என்று நெல்லை தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் மணி நேற்று ஆய்வு செய்தார்.
நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் நடந்த வாகன சோதனையை அவர் பார்வையிட்டார். அப்போது வாகனங்களில் செல்வோரிடம் பணத்திற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
Related Tags :
Next Story