மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் - நடிகர் கார்த்திக் பேச்சு
மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று நடிகர் கார்த்திக் பேசினார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து நேற்று மாலையில் மனித உரிமை காக்கும் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் கோவில்பட்டி காந்திநகர், அத்தை கொண்டான், இனாம் மணியாச்சி, சவலாப்பேரி, கயத்தாறு ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து தமிழசை சவுந்தரராஜனுக்கு வாக்கு சேகரித்தார். இனாம்மணியாச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது;-
நம் அனைவருக்கும் தேசப்பற்று வேண்டும். எனது சிறு வயதில் விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லையில் போய் நான் நிற்பேன். மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் மத்திய, மாநிலத்தில் இணக்கமான அரசு இருக்க வேண்டும். யார் என்று தெரியாமல் கேள்விக்குறியுடன் உள்ள கூட்டணிக்கு வாக்களித்தால் நமது வாக்கு வீணாகிவிடும். எனவே மத்தியில் ஒரு நிரந்தரமான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மனித உரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் தவசிபாண்டியன், மாவட்ட செயலாளர் வெயிலுமுத்துபாண்டியன், பொருளாளர் பிரபு, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story