ராமநத்தம் அருகே, 200 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு - போலீசார் விசாரணை
ராமநத்தம் அருகே 200 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநத்தம்,
பெரம்பலூர் மாவட்டம் இலுப்பை குடிகாட்டை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவருக்கு ராமநத்தம் அடுத்த ஆலத்தூரில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆலத்தூரை சேர்ந்த விவசாயி கோவிந்தராசு(வயது 63) என்பவர் குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்து வருகிறார். தற்போது வாழை மரங்கள் குலை விட்டு வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் கோவிந்தராசு நிலத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 200-க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. இதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் சிலர் இந்த மரங்களை வெட்டியுள்ளது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரங்களை வெட்டிச்சென்ற மர்மநபர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி ஒருவரது வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story