பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
பாலக்கோட் தாக்குதல் குறித்து பேசியது தொடர்பாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
பிரதமர் மோடி நேற்று முன்தினம் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், பாலக்கோட் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினோம் என்று கூறினார்.
இந்த நிலையில் இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி கடந்த 9-ந் தேதி மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் பாலக்கோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படைக்கும், புலவாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்த வீரர்களுக்காகவும் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று மோடி பேசியுள்ளார்.
ராணுவ நடவடிக்கையை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதையும் மீறி பிரதமர் ராணுவ நடவடிக்கை குறித்து பேசி இருக்கிறார்.
இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும் இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். தேர்தல் பிரசாரத்தில் ராணுவ நடவடிக்கையை பயன்படுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகள் குறிப்பாக பா.ஜனதாவுக்கு உத்தரவிட வேண்டும். பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.