கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 2:35 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் குமரி மாவட்டத்தில் வேட்பாளர்கள் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம், உருவப்படம் ஆகியவை இணைக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப தயாராக உள்ளன.

கன்னியாகுமரி தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகர்கோவிலில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் தினமான மே மாதம் 23–ந் தேதி அன்று 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும். கன்னியாகுமரி தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரசாந்த் வடநேரே நேற்று கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தேர்தல் பொது பார்வையாளர் காஜல், வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோரும் உடன் சென்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும். 18–ந் தேதி மாலை 6 மணிக்கு பிறகு அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். மேலும் பாதுகாப்பு கருதி பாலிடெக்னிக் கல்லூரியின் அனைத்து நுழைவு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளுமே அவர்களது கணக்கில் சேர்க்கப்படும். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களில் யார் மீது புகார் வந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் இடம் பெற்றிருக்கும். வாக்காளர்கள் எந்த விதமான அச்சமும் இன்றி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் வாக்குப்பதிவு நடைபெற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியபோது, “கன்னியாகுமரி நாடாளுமன்றம் 117 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 முதல் 18 வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கும். இதனை மண்டல தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மண்டல அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் “100 சதவீத ஓட்டு மை இந்தியர்களின் பெருமை“ என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த தபால் தலையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார்.

Next Story