தஞ்சையில், போலீஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.–அ.ம.மு.க.வினர் மோதல்


தஞ்சையில், போலீஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.–அ.ம.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 4:05 PM GMT)

தஞ்சையில், போலீஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.– அ.ம.மு.க.வினர் மோதிக்கொண்டனர். இதையொட்டி அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 32). அ.ம.மு.க. உறுப்பினரான இவர், அந்த பகுதியில் குடிபோதையில் தகராறு செய்ததாக மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சத்தியமூர்த்தியை தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.


அங்கு ரத்தக்காயங்களுடன் சத்தியமூர்த்தி அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சத்தியமூர்த்தியிடம் என்ன நடந்தது? என்று விசாரணை செய்தனர். அதற்கு அவர், சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சரவணன், மணி உள்ளிட்ட சிலர் என்னை அ.தி.மு.க.வில் சேர வற்புறுத்தினர். நான் மறுத்ததால் என்னை அடித்துவிட்டனர் என தெரிவித்தார்.

இதனைக்கேட்ட அ.ம.மு.க.வினர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சத்தியமூர்த்தியை அடித்த அ.தி.மு.க.வினரை கைது செய்யாமல், அவரை எதற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தீர்கள்? என கேட்டனர். மேலும் அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக அவர்கள் கோ‌ஷமிட்டபடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


இந்த நிலையில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு அ.ம.மு.க.வினர் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் போராட்டம் நடத்தியவர்கள் சமாதானம் அடையவில்லை.

இந்த நிலையில் கோட்டை பகுதி அ.தி.மு.க. செயலாளர் புண்ணியமூர்த்தியின் உதவியாளரும், 26–வது வார்டு அ.தி.மு.க. செயலாளருமான மூர்த்தி அங்கு வந்தார். அவர் தனது பையில் இருந்த செல்போனை எடுத்து அங்கு நடந்த சம்பவத்தை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அ.ம.மு.க.வினர், அவரை பிடித்து தாக்கினர். அப்போது அங்கு இருந்த போலீசார், மூர்த்தியை மீட்டு போலீஸ் நிலையத்துக்குள் அழைத்து சென்றனர்.


இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். இதனால் அங்கு மேலும் பதற்றம் நிலவியது. இதையடுத்து மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, ஆயுதப்படை போலீசார் என 50–க்கும் மேற்பட்டவர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை சுற்றி நிறுத்தப்பட்டனர்.

இதன்பின்னர் அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய இருதரப்பையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.


அதன் பின்னர் காயமடைந்த சத்தியமூர்த்தியை சிகிச்சைக்காக அ.ம.மு.க.வினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரையில் 2 மணி நேரம் போலீஸ் நிலையம் இருந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தஞ்சை கோட்டை பகுதி அ.தி.மு.க. தொழில்நுட்பபிரிவு செயலாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் அ.ம.மு.க.வை சேர்ந்த சத்தியமூர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சரவணன், மணிகண்டன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இது குறித்து அ.ம.மு.க. தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் கூறுகையில், ‘‘அ.ம.மு.க. நிர்வாகிகளை போனிலும், நேரிலும் அழைத்து அ.தி.மு.க.வில் சேரும்படி அ.தி.மு.க.வினர் வற்புறுத்தி வருகின்றனர். சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியை அ.தி.மு.க.வில் சேர வற்புறுத்தி உள்ளனர். அவர் சேர மறுக்கவே அவரை தாக்கியுள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட எங்கள் கட்சி உறுப்பினர் மீது தான் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆளும் கட்சிக்கு சாதகமாக போலீசார் செயல்படுகின்றனர். எங்கள் கட்சி உறுப்பினரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம். அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி உறுதியாகிவிட்டதால் அதை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செயல்படுகின்றனர்’’என்றார்.


இது குறித்து அ.தி.மு.க. பகுதி செயலாளர் அறிவுடைநம்பி கூறுகையில், ‘‘நாங்கள் மற்ற எந்த கட்சிகாரர்களையும் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அ.தி.மு.க. சார்பில் சீனிவாசபுரத்தில் பிரசாரம் நடைபெற்றபோது அங்கு வந்த சத்தியமூர்த்தி குடிபோதையில் அ.தி.மு.க.வை தரக்குறைவாக பேசினார். இவ்வாறு பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்கு போலீஸ் நிலையத்தில் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம்.

எங்கள் கட்சியை சேர்ந்த யாரும் சத்தியமூர்த்தியை தாக்கவில்லை. அவர் குடிபோதையில் கீழே விழுந்து காயம் அடைந்துவிட்டார். ஆனால் அ.தி.மு.க.வினர் தாக்கியதாக பொய் புகார் தெரிவித்துள்ளனர். தஞ்சையில் தேர்தல் குழப்பத்தை உருவாக்கி அ.தி.மு.க. வெற்றியை தடுக்க அ.ம.மு.க.வினர் மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று’’ என்றார்.

தஞ்சையில், போலீஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.–அ.ம.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story